திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நேற்று (19.12.2021) சப்-கோர்ட் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி, பார்த்திபன், நிர்மல் குமார், மஞ்சுளா, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சட்டம் மற்றும் ஊழல் தடுப்புத் துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட நீதிபதி ஜமுனா, மாவட்ட ஆட்சியர் விசாகன், தலைமை மாஜிஸ்திரேட்டு மோகனா, எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசியதாவது, “ஒட்டன்சத்திரத்தில் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் செயல்பட்டுவருகின்றன. தற்போது சப்-கோர்ட் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடத்தை ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் தேர்வு செய்து அதற்கான பரிந்துரைகளை ஐகோர்ட்டுக்கு அனுப்பிவைத்தால் அது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும். அமைச்சர்களும் இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மக்களுக்கும் விரைந்து நீதி கிடைக்க தேவையான இடங்களில் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வழக்குகளை விரைந்து முடித்து தாமதமின்றி நீதி கிடைக்க வழிவகை ஏற்படும். வக்கீல்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பொதுமக்களுக்கு நீதி கிடைக்க சேவையாற்ற வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான சக்கரபாணி பேசியதாவது, “ஒட்டன்சத்திரம் தொகுதி மக்கள் பழனி சப்-கோர்ட்டை அணுக வேண்டியிருந்ததால் அவர்களுக்கு கால விரயமும் பயண செலவும் ஏற்பட்டது. இதனால் ஒட்டன்சத்திரத்தில் சப்-கோர்ட் அமைக்கப்பட வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்தது. தற்போது அந்தக் கோரிக்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று கூறினார்.