கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் 'நிவர்' புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இதை எதிர்கொள்ள மாவட்ட மக்களும் விவசாயிகளும் தயாராகவே இருந்தனர்.
காரணம் புயல் பாதிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், கடந்த பல ஆண்டுகளாக மேற்படி மாவட்டங்களில் போதிய அளவு மழை இல்லாததால், பல ஆண்டுகளாக ஓடைகள், கண்மாய்கள், ஆறுகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயம் பொய்த்துப் போய் கோடைக் காலங்களில் குடிநீருக்கே மக்கள் காலிக்குடங்களுடன் தெருவில் இறங்கிப் போராடும் நிலை இருந்து வருகிறது.
இதனால் விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளிகளும் பல்வேறு மாநிலங்களுக்கும் ஊர்களுக்கும் புலம்பெயர்ந்து சென்று வாழ்கிறார்கள். அந்த மக்கள் தற்போதைய 'நிவர்' புயல் காரணமாகப் போதிய அளவு மழைபெய்யும், அதன்மூலம் வெள்ளப் பெருக்கெடுத்து, ஆறுகள், ஏரிகள் நிரம்பும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடும், ஆவலோடும் வெளியூர்களில் வெளிமாநிலங்களுக்குச் சென்று இருந்தவர்கள் கூட அதிக அளவு மழைபெய்து ஏரி குளங்கள் நிரம்பினால், தங்கள் ஊருக்கு வந்து விவசாயம் செய்வதற்கு தயாராக இருந்தனர். அப்படிப்பட்டவர்களுக்கு நிவர் புயல் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
புயலால் ஏற்படும் இழப்புகளைத் தாங்கிக் கொள்ளத் தயாராகவே இருந்தோம். புயலால் பெய்யும் மழையினால் ஆண்டுமுழுவதும் விவசாயம் செய்யவும் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு மழை வெள்ளம் வரும் என்று ஆவலோடு ஆறுகளையும் ஓடைகளையும் வைத்தகண் வாங்காமல் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது புயல் மழை என்று வருத்தத்துடன் கூறுகின்றனர். விவசாயிகளும் பொதுமக்களும் அடுத்து வரும் புயல் மூலம், எதிர்பார்ப்பை மழையாக அளிக்குமா என்று அனைத்துத் தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர். பத்திரிகை ஊடகங்கள் மத்தியில் இருந்த புயல் பற்றிய செய்திகள் பரபரப்பாக வலம் வந்தன. அதனால், பொதுமக்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் எந்தவிதப் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தவே இல்லை.
இந்நிலையில், நிவர் புயல் பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சுமார் 3 மணி அளவில் கடலூர் விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும், விவசாயிகளையும் சந்திப்பதற்காக அவசரப் பயணமாகப் புறப்பட்டு வந்தார். கடலூரில் புயல் நிவாரண பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களையும் நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர், கடலூர் வழியில் ரெட்டிச்சாவடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை நேரில் பார்வையிட்டு, வாழை பயிரிட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தேவனாம்பட்டினம் முகாமில் தங்கியிருந்த மக்களிடம் அவர்கள் குறைகளைக் கேட்டறிந்ததோடு, நிவாரண உதவிகள் பொருட்களையும் வழங்கினார். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரிடம் முதலமைச்சர் சேத விவரங்களைக் கேட்டறிந்தார். கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு நேரில் சென்ற முதலமைச்சர், மீனவ மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
அப்போது, மீனவ மக்கள் புயலால் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இப்படிப் பல்வேறு இடங்களைப் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்கள் மத்தியில், நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முழுவீச்சில் தயாராக இருந்தது. மாவட்ட ஆட்சியர்களுக்கு முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி அனைத்துத் துறை அதிகாரிகளும் மிகவும் விழிப்புடன் கண்காணிப்பில் இருந்தனர். கடலூரில் புயல் கரையைக் கடக்கும் போது சேதம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தோம்.
ஆனால் அந்த அளவிற்குப் பெரும்சேதம் ஏற்படவில்லை என்பது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. சுமார் 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவுகள் உட்பட அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் செய்துகொடுத்துள்ளனர். அதேபோல் விவசாயிகளின் பயிர்கள் இந்தப் புயல் பாதிப்பினால் சேதம் அடைந்திருந்தால், அதற்கான விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து இருந்தால், அவர்களுக்கான இழப்பீடு பெற்றுத் தரப்படும். இந்த நிவர் புயல் பாதுகாப்புப் பணியில் மிகவும் விழிப்புடன் அயராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு அலுவலர்கள் ஊழியர்கள், காவல்துறையினர் உட்பட அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.