விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர், அதன் அருகேயுள்ள திருமதுரை கிராமத்தை சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், அவர் வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். 95 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடியவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய விழுப்புரம், சிறுமதுரை புதுக்காலனி அதிமுக கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்த கலியபெருமாள், திருமந்துரை காலனி கிழக்கு கிளை கழக மேலமைப்பு பிரதிநிதி பொறுப்பிலிருந்த கே. முருகன் ஆகிய இருவரும் நீக்கப்பட்டதாகவும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவர்களை கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்குவதாகவும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் சிறுமி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். சிறுமி கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இந்த கொடூர செயலை வன்மையாக கண்டிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், கொலை செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.