கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (04/06/2021) ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (04/06/2021) காலை 11.30 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் ஜூன் 7ஆம் தேதி அன்று காலை 06.00 மணியுடன் முடிவடையும் நிலையில், கரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அளிப்பது, கரோனா அதிகம் உள்ள கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் ஊரடங்கில் தளர்வுகளை அளிப்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு இன்றே வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.