Skip to main content

போராட்டத்தில் மயங்கி விழுந்த மாணவர்... பதட்டமான போராட்டக் களம்!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

chidambaram rajah muthiah medical college student

 

சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 46 நாட்களாக, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைப் போலவே தங்களுக்கும் வசூலிக்கவேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து அறவழியில் போராடி வருகிறார்கள்.

 

இந்த நிலையில் அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தமிழக அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் விடுதியில் உணவு, மின்சாரம், குடிநீர் வழங்குவதை நிறுத்தியுள்ளது. இதனால் மாணவர்கள் விடுதி வாயிலில் வாலியுடன் அமர்ந்து குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவையைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் வெளியிலிருந்து உணவு எடுத்து வருவதை கல்லூரி நிர்வாகம் தடுத்தது. 'ஏன் தடுக்கிறீர்கள்' என்று மாணவர்கள் கேட்டுக் கொண்டிருந்தபோது முதுநிலை மாணவர் அசாருதீன் என்பவர் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இவரை சக மருத்துவ மாணவர்கள் மீட்டுச் சென்று போராட்டக்களத்தில் படுக்கவைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் கல்லூரி வளாகம் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது.
 

chidambaram rajah muthiah medical college student


இந்த நிலையில், சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க கடலூர் மாவட்டத் தலைவர் முத்து தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சி.ஐ.டி.யு. சங்கத்தினர் போராட்டக் களத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவர்களின் போராட்டத்தை அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் நகரம் மற்றும் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் பால.அறவாழி, போராட்டக்களத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலைக்கழகத்திற்கு வெளியே போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

 

பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக எடுக்கும் நடவடிக்கைகள் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கிவிடும் சூழல் உள்ளது என அனைத்துத் தரப்பினரும் கூறுகின்றனர். இனியாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்