கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கரோனா வைரஸ் எதிரொலியாக கடந்த மூன்று நாட்களாக மருத்துவ ஆய்வுக்கு உட்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அனுமதித்து வந்தனர். இந்த நிலையில் வைரஸ் தாக்கம் இந்தியாவில் முன்னேறி வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 பேருக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் கோயில், தேவாலயம், மசூதி என அனைத்து மக்கள் கூடும் இடங்களையும் மூட வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை முதல் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுத்து அனைத்து கதவுகளையும் மூட உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து கோவில் உள்ளே தீட்சிதர்கள் பூஜை செய்து கொள்ளலாம் தீட்சிதர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவர்களது கட்டளைதாரர்கள் என யாரும் உள்ளே செல்லக்கூடாது என சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா மருத்துவர்கள் ஆகியோர் அறிவுறுத்தினார்கள்.
இதனை தொடர்ந்து கோயிலுக்கு உள்ளே பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட யாரையும் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் வெளியூர்களிலிருந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வாசல் வரை வந்து திரும்பி செல்கின்றனர். மேலும் வரும் 31-ம் தேதி வரை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு யாரும் வரவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில் உள்ளே வழக்கமாக நடைபெறும் அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருகிறது. பூஜை செய்பவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனைத்தொடர்ந்து நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கோவில் மற்றும் பேருந்துநிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதியில் கிருமிநாசினியை தெளித்தனர். கோவிலுக்குள்ளே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாததால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.