கும்பகோணம் ஐயர் காபி என்று விளம்பரப்படுத்தி வந்த தமிழகத்தில், கும்பகோணம் ஐயர் சிக்கன் என சொல்லித்தான் பார்ப்போமே என்று வணிக ரீதியிலாக சிந்தித்து, முகநூல், வாட்ஸ்-ஆப் போன்ற வலைத்தளங்களில், வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக, விளம்பரம் என்ற பெயரில் நூல்விட்டுப் பார்த்தது மதுரையில் உள்ள மிளகு ஓட்டல். அவர்கள் நினைத்தது போலவே, ஓட்டல் மெனுவில் இடம்பெற்ற ஐயர் சிக்கன் என்பது சர்ச்சையாகி, அந்த ஓட்டலுக்கு விளம்பரம் தேடித் தந்திருக்கிறது.
விவகாரம் இதுதான் –
முதலில் 007 சிக்கன் என்றுதான் ஒரு ஸ்பெஷல் அயிட்டத்துக்குப் பெயர் வைத்திருந்தது அந்த ஓட்டல். போனி ஆகவில்லை. உணவில் தரமும் சுவையும் இருந்தால், வாடிக்கையாளர்கள் தானாகத் தேடி வருவார்கள் என்பதை அறிந்திருந்தும், ‘சீப் பப்ளிசிடி’ தேடும் விதத்தில், வேண்டுமென்றே கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற பெயரில் ஸ்பெஷல் அயிட்டம் ஒன்றை தங்கள் மெனுவில் சேர்த்து வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி இருந்தனர்.
அசைவம் பக்கமே திரும்பாமல், சமுதாயக் கட்டுப்பாடாக சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடக்கூடிய மக்கள் நம்மிடையே இருக்கிறார்கள். விதிவிலக்காக அந்த சமுதாயத்தினரில் ஒருசிலர் அசைவம் சாப்பிடவும் செய்வர். ஆனாலும், குறிப்பிட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்களில் பலரும். சைவம் என்ற தங்களது கொள்கையில் மிக உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக, பிராமணர்களில் பெரும்பாலானோர் சைவத்தை தீவிரமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
மிளகு ஓட்டல் நடத்துபவர்கள், பிராமணர்களின் இந்த சைவைக் கொள்கையில்தான் உரசிப் பார்த்துவிட்டனர். அதனால்தான், ஆவேசத்துடன் மிளகு ஓட்டலை முற்றுகையிட்டு, பிடிபிடியென்று பிடித்தார்கள் பிராமணர்கள். வியாபார உத்தியுடன் விளம்பரம் செய்திருந்த ஓட்டல் நிர்வாகத்தினர், ‘நினைத்தது நடந்துவிட்டது’ என்ற பரமதிருப்தியுடன், மன்னிப்புக் கேட்பதற்குத் தயார் நிலையில்தான் இருந்தனர். அதனால், ஒருங்கிணைந்த தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினரிடம் விறுவிறுவென்று நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தனர். தனிப்பட்ட சமூகத்தினரை துன்புறுத்தும்படி இனி விளம்பரம் செய்யமாட்டோம் என்று உறுதியும் அளித்தனர்.
எங்கும் எதிலும் விளம்பரம் என்றாகிவிட்ட நிலையில், ‘இதெல்லாம் சகஜமப்பா..’ என்று நாம் கடந்துபோக வேண்டியதுதான்!