மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்குகின்றன. தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இப்போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார்.
44வது செஸ் ஒலிம்பியாட் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று (28/07/2022) தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சுடர் ஓட்டத்தை, கடந்த ஜூலை மாதம் 19- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் தொடங்கி வைத்தார். 75 நகரங்களுக்கு பயணித்த செஸ் ஒலிம்பியாட் சுடர், மாமல்லபுரம் வந்தடைந்தது.
விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழியாக இந்த சுடர், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (28/07/2022) மாலை நடைபெறும் தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் 22,000 சதுர அடியில் அரங்கமும், 52,000 சதுர அடியில் பிரம்மாண்டமான மற்றொரு அரங்கமும், அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நடைபெறும் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 350 அணிகள் பங்கேற்கின்றனர். ஆடவர் பிரிவில் 188 அணிகளும், மகளிர் பிரிவில் 162 அணிகளும் விளையாடவுள்ளன.
இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா மூன்று அணிகள் களமிறங்குகின்றன. தொடக்க விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலைகள் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, பூஞ்சேரி மட்டுமின்றி சென்னை முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சென்னை முதல் பூஞ்சேரி வரை கருப்பு, வெள்ளை சதுரங்கப் பலகைகளும், தம்பிக் குதிரைச் சின்னமும் கண்கவர் ஓவியங்களாக அலங்கரிக்கின்றன.
தொடக்க விழாவிற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று (28/07/2022) மாலை விமானம் மூலம் சென்னை வருகிறார். போட்டி நடைபெறும் பூஞ்சேரி தனியார் விடுதியில் காவல்துறையினர் 3,000 பேரும், சென்னையில் 22,000 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டு சமூக வலைத்தளங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப. தெரிவித்துள்ளார்.