இந்தியவின் 75வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் புதுச்சேரி கடற்கரையில் தியாகச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் ஆயிரம் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள், அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த தியாகச்சுவர் அமைக்கும் பணியினை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பார்வையிட்டார்கள். அப்போது சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் பெயர் பலகையை தியாகச்சுவரில் ஆளுநர் தமிழிசை பதித்தார்.
அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, "சென்னையில் தேசிய பெருமை வாய்ந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற தயாராகி வருகின்றது. ஆனால் எனக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. தேசிய உணர்வோடு நடத்தக்கூடிய விழா 186 உலக நாடுகளில் இருந்து வீரர்கள் குவிந்து வருகின்றார்கள். தமிழகத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது மிகுந்த பெருமை.
உலக நாடுகளில் உள்ளவர்கள் எல்லாம், ’உங்களுக்கு யார் பிரதமராக வரவேண்டும்’ என்றபோது நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டும் என்ற விருப்பத்தை தெரிவிக்கின்றார்கள். ஆக நாட்டின் அடையாளமான பிரதமர் மோடியின் படம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் இல்லை. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும். இனி எல்லா இடங்களிலும் மோடியின் படம் இடம்பெறச் செய்ய வேண்டும்" என கூறினார்.