சென்னையில் பிப்ரவரி 24- ஆம் தேதி முதல் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று பபாசி அறிவித்துள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான வாசகர்கள் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வர். மேலும் எங்கும் கிடைக்காத புத்தகங்களும் இங்கு கிடைக்கும்.
இந்த நிலையில், கரோனா காரணமாக புத்தகக் கண்காட்சி இந்தாண்டு நடைபெறுமா என்ற கேள்வி புத்தக வாசகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில், பபாசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "44- வது புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 24- ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 24- ஆம் தேதி முதல் மார்ச் 9- ஆம் தேதி வரை நடைபெறும். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 14 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறும். காலை 11.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு புத்தகப் பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் கண்காட்சியில் பங்கேற்பதால், தமிழகத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.