Published on 30/04/2020 | Edited on 30/04/2020
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103 ஆக இருந்த நிலையில், இன்று 138 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது முறையாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100-ஐ கடந்திருகிறது. சென்னையில் மொத்தமாக 906 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
சென்னையில் கரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அடிப்படை வசதிகள் தயாராக வைத்திருக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் பள்ளிகளில் முகாம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் பார்வையிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர எல்லைக்குள் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மே 2-ஆம் ஆம் தேதிக்குள் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டிருந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் இந்த சுற்றறிக்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.