சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அபிஷேக்(23) என்பவர் தனது உறவினர்களுடன் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். அப்போது புதுச்சேரி எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கைப்பாணிகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக 15 இடங்களில் அபிஷேக்கை வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அபிஷேக் குறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற மரக்காணம் போலீசார் அபிஷேக் உயிருடன் இருப்பதை அறிந்து சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அபிஷேக் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பதும் அவரது பகுதியில் கானா பாடல்கள் பாடுவதில் பிரபலமானவர் எனவும் உடன் வந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாதயாத்திரை வந்த பக்தரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய துரத்துவதும், இரண்டு சக்கர வாகனத்தில் பின் தொடர்வதும் போன்ற சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற நபரை வெட்டி கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.