'நிவர்' புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சில இடங்களில், 5 -ஆவது நாளான இன்றும், தண்ணீர் வடியாமல் இருக்கிறது.
சென்னை, வில்லிவாக்கம் பகுதியில், பாடி மேம்பாலம் அருகே இருக்கும் அன்னை சத்தியா நகரில், 'நிவர்' புயல் காரணமாக, மழை நீர் முழங்கால் அளவிற்குத் தேங்கியுள்ளது. 5 நாட்கள் ஆகியும், இன்னும், மழை நீர் வடியாததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புயல் கரையைக் கடந்த அன்று, நமது நிருபர் செய்தி சேகரிக்கச் சென்றபோது, அந்தப் பகுதிக்குள்ளே செல்ல முடியாத அளவிற்கு, மழை நீர் சூழ்ந்திருந்தது. மீண்டும் இன்று, (28ஆம் தேதி) அப்பகுதியின் நிலவரத்தை அறிய, நமது நிருபர் அப்பகுதிக்குச் சென்றார். ஆனால், இன்றும் அதே நிலைமையில்தான் வில்லிவாக்கம் அன்னை சத்தியா நகர் உள்ளது.
மழைநீர் தேங்கியிருப்பது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள மாதா என்பவர், “நாங்க இப்போ இந்த தனியார் ஸ்கூல்லதான் தங்கியிருக்கிறோம். இதுவும் மழை நீர் வந்தவுடனே, இந்த ஸ்கூல் ஆளுங்க வந்து, எங்க ஸ்கூல்ல வந்து தங்கிக் கொள்ளுங்கள் என்றனர். அதன் பிறகுதான், கார்ப்ரேஷன் ஆளுங்கவந்து பார்த்தார்கள். அதன்பிறகு சாப்பாடு கொடுத்தார்கள். ஆனால், நாங்கள் அவர்களை எதிர்பார்க்கால், எங்க மக்களே சேர்ந்து, எந்தக் கட்சி வேறுபாடும் இல்லாமல் சாப்பாடு செய்து சாப்பிடுகிறோம்.
எங்க பகுதிக்குப் பின்னால் கொரட்டூர் ஏரி இருக்கு. அந்த ஏரியை முறையா பராமரிக்காமல் விட்டதால், அதில் இருந்து தண்ணீர் லீக் ஆகி, எங்கள் வீடுகளுக்குள்ள எல்லாம் வெள்ளம் வந்தது. அதுமட்டுமில்லாமல், அந்த ஏரி அருகில், ஒரு கால்வாய் இருக்கு. அதுல இருந்தும் தண்ணீர் லீக் ஆகித்தான் இங்கு இவ்வளவு வெள்ளம் இருக்கு.
புயல் கரையைக் கடக்கின்ற அன்று காலை தி.மு.க. தலைவர் மட்டும் வந்து பார்த்துவிட்டு சில உதவிகள் செய்தார். வெள்ளம் வந்தபிறகு முதல்வர் எடப்பாடி பழனிசமாசியின் பி.ஏ. என ஒருவர் வந்து பார்த்துவிட்டுச் சென்றார். இன்றுவரையும் இந்தத் தனியார் பள்ளியில்தான் தங்கியிருக்கிறோம். பல்வேறு இடங்களில் எந்திரங்களைக் கொண்டு தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியெடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், எங்கள் பகுதியில் இன்னும் தண்ணீர் அப்படியேத்தான் இருக்கிறது.
ஏற்கனவே கரோனா தொற்று ஒரு புறம் அனைவரையும் அச்சுருத்துகிறது. இதில், தொடர்ந்து 5 -ஆவது நாட்களாக, கழிவு நீருடன் சேர்ந்த இந்த வெள்ள நீரும் வடியாமல் இருப்பது இன்னும் பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்துமோ எனும் அச்சத்தைக் கூட்டியிருக்கிறது. குழந்தைகளை வைத்துக்கொண்டு இங்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறோம். தண்ணீர் தேங்கியிருப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிக்களும் வருகிறது. தண்ணீர் ஒரே இடத்தில் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது. உணவைக்கூட உட்கொள்ள முடியாமல் இருக்கிறோம். பெரியவர்கள் எப்படியோ சமாளித்துக் கொள்கிறோம். குழந்தைகளுக்கு அடிப்படை தேவையான குடிநீர், பால்கூட கிடைக்காமல் அவதிப்படுகிறோம்.
எங்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. எங்கள் துணிகளைக் கூட எங்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. யாராவது உதவி செய்தால் நல்லா இருக்கும்” என்றார் கண்ணீர் மல்க வேதனையோடு.