குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொது மக்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
மாலை வரையிலும் போராட்டம் சரியாக சென்றுக்கொண்டு இருந்தது. இரவு 7 மணிக்கு போராட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கை மணி அடித்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் முதியவர் பைஷல்ஹக்கு என்பவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் மண்டல் இணை ஆணையர் பி.விஜயகுமாரி, ராஜமங்களம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராஜ்குமார், ஆயுதப்படை பெண் காவலர்கள் கலா, உதயகுமாரி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் முதியவர் இறந்ததற்கும், இந்த போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், "இன்று வடசென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக அமைதியான முறையில் போராடியவர்கள் மீது காவல்துறை கொடூரமான கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தாக்கபட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.