கடந்த மே 3ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு, எந்தெந்த கடைகள் திறக்கப்படலாம் என அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதில் டீக்கடைகள் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை டீக்கடைகளைத் திறந்து வைக்கலாம். ஆனால் பார்சல்களை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டுமே தவிர அங்கே, நின்றோ, அமர்ந்தோ, காபி, டீ, பிஸ்கெட், சிற்றுண்டி போன்றவற்றை உட்கொள்ள அனுமதி கிடையாது. நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் டீக்கடைகள் உடனடியாக மூடப்படும்.
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற இடங்களுக்கு இந்தத் தளர்வு பொருந்தும். மே 11ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டதால் இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் டீக்கடைகள் திறக்கப்பட்டன. அரசு சொன்ன விதிமுறைகள் படி, டீக்கடைகளில் பார்சல் மட்டுமே கொடுக்கப்பட்டது.