சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்த வந்ததனால், ஜூன் 19 ஆம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே அதாவது நேற்றே மதுப்பிரியர்கள் மதுபானங்களை தங்கள் தேவைக்கு ஏற்ப கூடுதலாக வாங்கிச் சென்றனர். மதுபானம் கூடுதலாக வாங்க வந்தவர்கள் பெரிய, பெரிய பைகளை எடுத்து வந்தனர். இதனால், சென்னை புறநகர் பகுதிகளை சுற்றி உள்ள பிற மாவட்ட டாஸ்மாக் கடைகளில் வழக்கத்துக்கு மாறாக நேற்று ஒரே நாளில் மட்டும் அமோக மது விற்பனை நடைபெற்றது. சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்குவதற்காக வரிசையில் மதுப்பிரியர்கள் நின்றிருந்தனர்.
சில கடைகளில் உயர் அதிகாரிகளுக்கு விற்பனையாளர்கள் மதுபானங்கள் தீரப்போகிறது, உடனே அனுப்புங்கள் என்று தகவல் அளித்து மதுபானங்களை வரவழைத்தனர். டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்று தீர்ந்ததால், மதுப்பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான நிறுவனத்தின் மது பாட்டில்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. ஏதோ ஒன்று கிடைத்ததே என கிடைத்தவற்றை வாங்கிச் சென்ற நிலைமையையும் நாம் பார்த்தோம்.