விளையாடச் சென்ற இளைஞர் ஒருவர் கட்டுமான பொருட்களைத் திருடியதாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை வெங்கடாபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஷாகின்ஷா காதர் (வயது 23). இவர் தனது நண்பர்களான வினோத் மற்றும் ஹேமாவுடன் தாடண்டர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் அருகில் உள்ள ஒரு பகுதியில் கால்பந்து விளையாடி உள்ளனர். பின்னர் அந்த புதிய கட்டடம் அருகே கிடந்த கட்டுமான பொருட்களைத் திருடிக்கொண்டு பைக்கில் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு இருந்த கட்டுமான ஊழியர்கள் மூவரையும் விரட்டிச் சென்றுள்ளனர். அப்போது மூவரில் ஹேமா மட்டும் கட்டுமான ஊழியர்கள் கையில் சிக்காமல் தப்பி விட்டார். ஷாகின்ஷா காதர், வினோத் ஆகிய இருவரும் கட்டுமான ஊழியர்களிடம் மாட்டிக்கொண்டனர். இவர்கள் இருவரையும் அங்கிருந்த ஊழியர்கள் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது வினோத்தும் அடி வாங்கிய நிலையிலேயே தப்பி ஓடி உள்ளார். ஆனால் ஷாகின்ஷா மட்டும் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷாகின்ஷா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் அங்கு வந்த ஷாகின்ஷா உறவினர்கள், சாகின்ஷா பொருட்களைத் திருடப் போகவில்லை என்று தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் போலீசிலும் புகார் அளித்தனர். இந்தக் கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக ஷாகின்ஷாவை தாக்கிய 7 என்ஜினியர்கள் மற்றும் ஊழியர் ஒருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். ஷாகின்ஷா காதர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.