பரவலாக கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. தமிழகத்திலும் கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கரோனா ஒன்று, இரண்டு, மூன்று என மொத்தம் மூன்று அலைகளுக்கு பிறகு கரோனா நோயாளிகள் ஒருவர் கூட இல்லை என்ற நிலையை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை எட்டியுள்ளது. கரோனா சிகிச்சையிலிருந்த அனைவரும் வீடு திரும்பியதால் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கரோனா நோயாளிகள் இல்லாத நாளாக உள்ளது. கரோனா தீவிரமடைந்திருந்த நேரத்தில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முன்பு ஆம்புலன்சில் கரோனா நோயாளிகள் காத்திருக்கும் நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அண்மையில் தமிழகத்தில் அரசு சார்பில் வாரந்தோறும் நடத்தப்படும் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் இனி நடத்தப்பட மாட்டாது, தேவைப்பட்டால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் முகாம்களை நடத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.