மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (20/06/2021) ரயில் சேவை தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடைப்பிடிக்கப்பட்ட பொது முடக்கத்தினால் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 10/05/2021 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (21/06/2021) முதல் தொடங்குகின்றன.
தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
மெட்ரோ ரயில் சேவைகள்:
மெட்ரோ ரயில் சேவைகள் தொடக்கத்தில் காலை 06.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயக்கப்படும். பின்பு தேவையின் அடிப்படையில் நேரம் மாற்றம் செய்யப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் சேவைகளை பின்வரும் நிலைகளில் இயக்க உள்ளது.
நீலவழித்தடம்- விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் இடையே மற்றும் பச்சை வழித்தடம்- பரங்கிமலை மெட்ரோ மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இடையே நாளை (21/06/2021) திங்கள்கிழமை முதல் உச்ச நேரங்களில் (Peak Hours) (காலை 09.00 மணி முதல் காலை 11.00 மணி வரை மற்றும் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை) 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.
பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.
மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளின் வருகை, வெளியேறுதல் மற்றும் தனிமனித இடைவெளியைக் கண்காணிப்பதற்காகத் தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடைமேடையில் காத்திருக்கும் போதும் ரயிலில் பயணிக்கும் போதும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் 6 அடி தூர இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அனைத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் பயன்படுத்தும் மற்றும் காத்திருக்கும் இடங்களில் தனிமனித இடைவெளி குறித்த 'X' குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவருக்கும் இந்த குறியீடுகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணித்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும், மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.