
நாடு முழுவதும் நான்காம் கட்ட பொது முடக்கத் தளர்வுகளில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, சென்னையில் நாளை (07/09/2020) காலை 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மெட்ரோ ரயில்கள்- என்னென்ன நடைமுறை?
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஸ்மார்ட் கார்டு மற்றும் QR கோடு மூலம் டிக்கெட் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய காற்று செல்லும் பாதைகளில் புறஊதா கதிர்கள் மூலம் கிருமிகள் அழிக்கப்படுகிறது.
24 முதல் 30 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் மெட்ரோ ரயில்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பராமரிக்கப்படவுட்டுள்ளன.
பயணிகளுக்காக இரண்டு படிநிலைகளில் காற்று சுத்திகரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொருமுறை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பிறகும் கிருமி நாசினி கொண்டு ரயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்படும்.
வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான நீலநிற வழித்தடத்தில் நாளை முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
செப்டம்பர் 9- ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்திற்கு பச்சை நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
காலை 08.30 முதல் 10.30 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
மார்ச் 22- ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.