தற்போது அமலில் உள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் ஜூன் 08 முதல் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டல் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், மேலாளர்கள், தொழிலாளர்களுக்கான ஒழுங்கு விதிகளை தமிழக அரசு வெளியிட்டது.
அதில், உடல் வெப்ப பரிசோதனை செய்து வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்ப வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் இருப்பவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. ஏ.சி. எந்திரங்களை பயன்படுத்தாமல் காற்றோட்டத்துக்கான அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும்.
அனைத்து மேஜைகளிலும் சானிடைசர் வசதி செய்து தர வேண்டும். கழிவறைகளை நாளொன்றுக்கு 5 முறை சுத்தம் செய்ய வேண்டும். தரை, அலமாறிகள், சமையல் அறை, லிப்ட் போன்றவை அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். அடிக்கடை கை படக்கூடிய மேஜைகள், பணம் செலுத்துமிடம், லிப்ட் பட்டன் போன்றவை சானிடைசர் மூலம் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
சமூக இடைவெளிக்காக மேஜைகளில் சேவை இல்லை என்ற பலகை வைக்கப்பட வேண்டும். இடவசதி பற்றிய தகவல் பலகையை நுழைவு வாயிலில் வைக்க வேண்டும். உணவை கையாள்வோர், கைக்கடிகாரம், நகைகளை அணியக்கூடாது. காய்கறி, அரிசி, பருப்பு போன்றவற்றை கழுவி உபயோகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
சென்னையைப் போல் மற்ற நகரங்களிலும் ஐம்பது சதவிகித இருக்கைகளுடன் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 75 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது குறித்து உணவக உரிமையாளர் ஒருவர் கூறும்போது, அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படிதான் உணவங்களை இயக்குகிறோம். விலையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. வடமாநில தொழிலாளர்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்டதால் சில உணவங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. சில பெரிய உணவங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பார்சல் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அரசின் விதிமுறைகளை நாங்கள் பின்பற்றுவதுபோல் வாடிக்கையாளர்களும் உணவகங்களுக்கு வரும்போது ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.