சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கரோனா தடுப்பு அதிகாரிகளுடன், கரோனா தடுப்பு ஒருங்கிணைப்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில் கரோனாவுக்குச் சிகிச்சையளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் போதிய படுக்கைகள் உள்ளன. கரோனாவுக்குச் சிகிச்சையளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்கத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். டி.வி. நடிகர், பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளார். வரதராஜன் மீது தொற்றுநோய்ச் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் காலத்தில் அரசுக்கு எதிராகத் தவறான கருத்தை வரதராஜன் வெளியிட்டுள்ளார். வரதராஜனை அழைத்துச் சென்று மருத்துவர், தூய்மைப் பணியாளர்களின் பணிகளைக் காட்டத் தயார். வதந்திகளைப் பரப்பினால் அரசு வேடிக்கை பார்க்காது; கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தடுப்பில் ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றுகின்றனர். ஆதாரம் இல்லாத எந்தத் தகவலையும் பரப்ப வேண்டாம். கண்ணுக்குத் தெரியாத வைரஸ்-ஐ எதிர்த்துப் போராடும் நிலையில் விமர்சனங்கள் வேண்டாம். இன்று 6 பேர் வெண்டிலேட்டரில் உள்ளனர்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.
சென்னை அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு என நாடக நடிகர் வரதராஜன் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.