Skip to main content

அண்ணா பல்கலைக்கழக உத்தரவு செல்லும்! -உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

chennai high court anna university students fee

 

 

கரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலிக்கும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

கரோனா ஊரடங்கின் காரணமாக இறுதியாண்டு பருவத் தேர்வை தவிர, மற்ற அனைத்து பருவத் தேர்வுகளையும் ரத்து செய்துள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆகஸ்ட் 14- ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த, அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டிருந்தார்.

 

தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக்கூடாது என, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் ஹரிஹரன், சுதன், சௌந்தர்யா மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கம் ஆகியோர் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது. 

 

அப்போது, மனுதாரர்கள் தரப்பில், ‘தேர்வு நடத்தப்படாத நிலையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு விடைத்தாளுக்கு 42 ரூபாய் என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம்,  4 லட்சம் மாணவர்களிடமிருந்து 13 கோடியே 44 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. கரோனா ஊரடங்கால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பெற்றோர்கள் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.’என்று வாதிடப்பட்டது.

 

அண்ணா பல்கலைகழகம் தரப்பில் ‘ஒரு தேர்வுக்கு ஒரு மாணவருக்கான கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் தயாரிப்பதற்கான ஊதியம், ஆய்வக செலவுகள், இணையதள இணைப்பு, மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுக்கு 148 ரூபாய் செலவிடப்படுவதால், ஒரு தேர்விற்கு 150 வீதம் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் மாதமே தேர்வுகள் வழக்கம் போல நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், விடைத்தாள் திருத்தும் செலவைத் தவிர மற்ற அனைத்தும் முடிந்துவிட்டது. அதன்படி, ஒரு மாணவரின் ஒரு தேர்வுக்கு தற்போது 126 ரூபாய் 10 பைசா செலவாகியுள்ளது. இந்தக் கட்டணம் நியாயமானதுதான். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. கட்டணத்தை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டால் பல்கலைக்கழகத்துக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துவதோடு, தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடும். மாணவர்களின் வழக்குகளின் பின்னால்,  கல்லூரிகளும் இருக்கின்றன' எனக் குற்றம் சாட்டப்பட்டது.

 

இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலித்த அண்ணா பல்கலைகழக பதிவாளரின் உத்தரவு செல்லும். மாணவர்களிடம் வசூலித்த தேர்வுக் கட்டணத்தை, 4 வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திடம் அந்தந்த கல்லூரிகள் செலுத்த வேண்டும்’ என உத்தரவிட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்