இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற மாநாட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தொழில் வளம் பற்றிய கையேட்டையும் முதல்வர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 500- க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் காணொளி மூலம் பேசிய முதல்வர் பழனிசாமி, "கரோனாவால் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது; இயல்பு நிலையை நோக்கி தமிழகம் முன்னேறுகிறது. சென்னையில் கரோனா பாதிப்பின் சூழ்நிலையைக் கருதி தமிழக அரசு மேலும் தளர்வுகளை அறிவிக்கும். சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் தளர்வுகள் கூடுதலாக அறிவிக்கப்படவில்லை. தமிழக தொழிலாளர்களைப் பயன்படுத்தி தொழில்துறை இயல்பு நிலைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. சென்னை காவல் எல்லைப்பகுதியில் 25% பணியாளர்கள், மற்ற பகுதியில் 50% பணியாளர்கள் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் உடல் நலம், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.