
சென்னையில் உள்ள திருவான்மியூர், சைதாப்பேட்டை, அடையாறு, கிண்டி உள்ளிட்ட 8 இடங்களில் பத்து சவரனுக்கு மேற்பட்ட நகைகள் நேற்று முன்தினம் (25.03.2025) ஒரே மணி நேரத்தில் தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அடையாறு காவல் எல்லைக்கு உட்பட்ட ஆறு இடங்களில் செயின் பறிப்புகள் நடைபெற்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்டது வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு இருவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறித் தப்பிக்க முயன்றதும் தெரிந்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீசார் ஹைதராபாத் செல்லும் விமானத்திலேயே வைத்து கைது செய்தனர். விசாரணையில் இருவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் மற்றும் ஜாபர் குலாம் ஹுசைன் என்பது தெரியவந்தது. அதோடு இந்த வழக்கில் ஆம்ஸ்ராம் ஈஸ்ராம் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் தான் கைது செய்யப்பட்ட ஜாபர் குலாம் ஹுசைனை நேற்று முன்தினம் நள்ளிரவு தரமணி பகுதியில் வைத்து திருவான்மியூர் போலீசார் என்கவுண்டர் செய்தனர். ஒரு மணி நேரத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நகைகளை தரமணி பகுதியில் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பதுக்கி வைத்திருந்த நகைகளை மீட்பதற்காகக் கைது செய்யப்பட்ட ஜாபரை போலீசார் தரமணிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கு மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து ஜாபர் போலீசாரை சுட்டுத் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது திருவான்மியூர் காவல் ஆய்வாளர் முகமது புகாரி தற்காப்பிற்காக ஜாபரை நோக்கிச் சுட்டுள்ளார். இதில், ஜாபர் குலாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சல்மான் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று (27.03.2025) ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து சல்மானுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி (09.04.2025) வரை நீதிமன்ற காவல் விதித்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் சல்மான் மீது 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜாபர் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் பார்த்திபன் நேற்று (26.03.2025) மாலை நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது இந்த என்கவுண்டர் எப்படி நடந்தது?. என்கவுண்டர் நடந்தபோது யார்? யார்? உடன் இருந்தனர் எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டார். அதே சமயம் காவல் ஆய்வாளர் முகமது புகாரியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது அடையாறு உதவி காவல் ஆணையர் முருகேசன் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.