கடந்த பிப்.16 ஆம் தேதி துவங்கிய சென்னை புத்தகக் கண்காட்சி இன்று நிறைவு பெற உள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் அதிகப்படியான மக்கள் புத்தங்களை வாங்க ஆர்வத்துடன் குவிந்துள்ளனர். மொத்தம் 700 அரங்குகள், 500 பதிப்பாளர்கள் என இந்த வருடம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வந்திருந்தது. எப்பொழுதும் 14 நாட்கள் மட்டுமே நடைபெறும் புத்தகக் கண்காட்சி இந்த வருடம் 19 நாட்கள் நடைபெற்றது.
சுமார் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தமுறை ஆன்லைனிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்தமுறை 15 கோடி ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைக்கும் பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வருடம் அம்பேத்கர், பெரியார், ஆன்மீகம் மற்றும் வரலாறு குறித்த புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆனதாக பபாசி தெரிவித்துள்ளது.