Skip to main content

பொதுநலத்தோடு புகார் கொடுத்தவருக்கு நிர்வாண சித்ரவதை! தொடரும் காவல்துறை ஏ.சியின் அடாவடி!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

 


மாநகராட்சி தொடர்பான புகார்களை பதிவுசெய்யத்தான்  ‘நம்ம சென்னை ஆப்’ கொண்டு வரப்பட்டது. ஆனால், நம்ம சென்னை ஆப் மூலம் பொதுநலத்தோடு புகார் கொடுத்த சமூக செயற்பாட்டாளர் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும், ஆக்கிரமிப் பாளர்களிடமிருந்து காப்பாற்றவேண்டிய காவல்துறை உதவி ஆணையரே, அவர்களுடன் கைக்கோர்த்துக்கொண்டு நிர்வாணப்படுத்தி கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டது சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஏ.சி.சரவணன்

ac

 

இதுகுறித்து, போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட சென்னை திருவெல்லிக்கேணியைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலரும் சமூக செயற்பாட்டாளருமான விஜயக்குமார் நம்மிடம், “வருத்தப்படாத வாக்காளர் சங்கத்தை நடத்தி பொதுமக்களுக்கான பல்வேறு விழிப்புணர்வுகளையூட்டி வருகிறோம். கடந்த, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போலி கையெழுத்துப்போட்டு மனுத்தாக்கல் செய்ததை கண்டுபிடித்து புகார் கொடுத்து மனுவை தள்ளுபடி செய்ய வைத்தது நாங்கள்தான்.

 

d

 

அதுமட்டுமல்ல, பிரபல தேவி தியேட்டரில் டிக்கெட்டுகளை கூடுதலாக விற்றது, சென்னை கே.எஃப்.சியின் சீட்டிங், காஃபி ஹவுஸில் தரமற்ற கேக் விற்பனையை புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவைத்தது என மக்களுக்கு எதிரான பல்வேறு பிரச்சனைகளுக்காக புகார் கொடுத்துப் போராடி வருகிறோம்.

 

இந்நிலையில், 2019  ஆகஸ்ட் – 12 ந்தேதி எங்களது வாட்ஸ் அப் குரூப்பில் இராயப்பேட்டை உட்ஸ் சாலையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து பாதசாரிகளுக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் இதனால், விபத்துகள் நடப்பதாகவும்  புகைப்படங்களுடன் ஒரு புகார் வந்தது. இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ஃபெரோஸ்கானின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். உடனே, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதன் ஃபோட்டோக்களை அனுப்பினார். அந்த, நடவடிக்கை குறித்து, வாட்ஸ்-அப் குரூப்பில் செய்தியாக பதிவு செய்தேன். அதேபகுதியில், ஜைதூன், பாம் ஜுமைரா, லஸ்ஸி ஷாப் உள்ளிட்ட ஹோட்டல்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக ஆகஸ்ட்-24 ந்தேதி புகார் வந்தது.

 

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி 111வது வார்டு ஏ.இ.க்கு புகார் அனுப்பினேன். அவரோ, 63-வது வார்டில் வருகிறது என்றார். அவர், பாதி ஆக்கிரமிப்பை மற்றும் அகற்றிவிட்டு ஃபோட்டோ அனுப்பியவர், 111 வது வார்டில்தான் வரும் என்கிறார். ஏன், இந்த குழப்பம்? என்று குழம்பிப்போய் மாநகராட்சியின்  ‘நம்ம சென்னை’ ஆப் மூலம் நவம்பர்-27 ந்தேதி புகார் கொடுத்தேன். 111 வது வார்டில் வருவதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டேன் என்று பொய்யான தகவலைக் கொடுத்துவிட்டு நான் ரிப்ளை பண்ணமுடியாத அளவுக்கு க்ளோஸ் பண்ணிவிட்டார்.

 

இதனால், ஆக்கிரமிப்பை அகற்றி நடைபாதையில் கடந்து செல்லும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று மீண்டும்   ‘நம்ம சென்னை’ ஆப்பில் புகார் கொடுத்தேன்.  ‘நடை பாதையில் உள்ள சேர்களை எல்லாம் எடுக்கச்சொல்லிவிட்டேன். திண்ணையையும் படிகட்டையும் அகற்றச்சொல்லி எச்சரிக்கை கொடுத்துள்ளேன்’ என்றுசொல்லிவிட்டு அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையையும் ஏ.இ.  எடுக்கவில்லை. இதனால், அதுகுறித்த புகைப்படத்தை ஆதாரத்துடன் எடுத்து மீண்டும் மாநகராட்சி ‘நம்ம சென்னை’ ஆப்பில் புகார் கொடுக்கலாம் என்று டிசம்பர்-3 ந்தேதி பகல் 1:30 மணிக்கு நேரில் சென்று ஃபோட்டோ எடுத்தேன்” என்றவருக்குத்தான் அடுத்தடுத்து ஆபத்துகள் காத்துக்கொண்டிருந்தன.    

 

திடீரென்று, ஃபோட்டோ எடுத்த விஜயகுமாரின் பைக் சாவியை பிடுங்கிவிட்டு அசிங்கம் அசிங்கமாக பேசி மிரட்டுகிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். உன்னால என்ன புடுங்கமுடியுமோ புடிங்கிக்கோ என்று அடிக்கப்பாய்கிறார்கள். மேலும், அதிமுக 63-வது வட்டச்செயலாளர் மனோஜிடமிருந்து மிரட்டல் வந்தது. இவர், தி.நகர் சத்யாவின் ஆள் என்று சொல்லிக்கொள்பவர். பிரச்சனை, விபரீதம் ஆவதை உணர்ந்த விஜயக்குமார் காவல்துறை கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண்ணான 100 க்கு ஃபோன் செய்து தகவல் சொல்கிறார். டி-2 அண்ணாசாலை காவல்நிலையத்திலிருந்து போலீஸ் வருகிறது. விஷயத்தைச்சொல்ல, மிரட்டி தாக்குதல் நடத்திய நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் மீது பெட்டி கேஸ் போட்டுவிடுகிறேன் என்று சொல்லி  சமாதானப்படுத்தி அனுப்ப முயற்சிக்கிறார்கள் எஸ்.ஐ. மூவேந்தர் உள்ளிட்ட போலீஸார். ஆனால், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு போகிறேன் என்கிறார் விஜயக்குமார். அதற்குப்பிறகுதான், அந்தக்கொடூர தாக்குதல் ஆரம்பித்தது.

 

“டி-2 அண்ணாசாலை காவல்நிலையத்தில் அமர்ந்து என்னை மிரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது புகார் எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென்று, உள்ளே நுழைந்த ஏ.சி. சரவணன். ’மாமுல் வாங்குற ரவுடிய உட்காரவெச்சு பேசிக்கிட்டிருக்கீங்களே? உங்களுக்கெல்லாம், வெட்கமா இல்லையாடா? யூனிஃபார்மை கழட்டி போடுங்கடா’ என்றபடி வர, போலீஸ் உட்பட யாரைச் சொல்கிறார் என்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே என்னை நெருங்கி, ‘ஏண்டா என் ஏரியாவிலேயே மாமூல் வாங்குறியான்னு சொல்லிக்கிட்டே மூஞ்சியில ரெண்டு பக்கமும் குத்த ஆரம்பிச்சுட்டாரு. சார், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. வேற யாரையோ நினைச்சுக்கிட்டு என்னை அடிக்கிறீங்கன்னு கதறினேன். நீ யாருன்னு எனக்கு தெரியும்டான்னு சொல்லிக்கிட்டே எட்டி உதச்சதும் முடியாம கீழ விழுந்துட்டேன். வலியில துடிச்சுக்கிட்டிருக்கும்போதே ஈவு இறக்கமில்லாத அந்த ஏ.சி.சரவணன் வயித்துலேயேயும் நெஞ்சிலேயும் பூட்ஸ்காலால் எட்டி உதைச்சார். இவனை, ரிமாண்ட் பண்ணுங்கன்னு சொன்னவர், சட்டை பேண்ட் எல்லாத்தையும் கழட்டச்சொல்லி ஸ்டேஷன் செல்லில் அடைச்சுட்டு இவனை ரிமாண்ட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு போயிட்டார்.

 

என்னை மிரட்டி தாக்குதல் நடத்திய ஆக்கிரமிப்பாளர்களை ஒவ்வொருத்தரா ஸ்டேஷனுக்கு வரவெச்சு காண்பிச்சுக்கிட்டே இருந்தாரு. மாலை 4 மணிக்கு டி-2 அண்ணாசாலை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வர்றாரு. 5 ½ மணிக்கு என் ட்ரெஸ்ஸை எல்லாம் கொடுத்து போட்டுக்கச்சொல்றாங்க. பாம் ஜுமைலா கடை உரிமையாளர் முஸ்தஃபாவிட புகார் வாங்கி பொய் வழக்குப்பதிவு செய்தார் எஸ்.ஐ. கிருஷ்ணன். 7 மணிக்கு என்னை அரெஸ்ட் பண்ணினமாதிரி ஃபோட்டோ எடுக்கிறாங்க. திருவெல்லிக்கேணியிலுள்ள அரசு கோஷா  மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டுப் போறாங்க. பரிசோதித்த டாக்டர்கள்,  ‘மூக்குலிருந்து வேற இரத்தம் வந்துக்கிட்டே இருக்கு. பி.பி., ஷுகர் அதிகமா இருக்கு. பல்ஸ் ரேட்டும் அதிமாகிடுச்சு. காது-மூக்கு- தொண்டை, ஹார்ட், நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களைப் பார்க்கணும்.  இவருக்கு, இப்பவே ட்ரீட்மெண்ட் கொடுக்கலைன்னா அவருடைய உயிருக்கே ஆபத்தாகலாம். அதனால, சிறையில அடைக்கிறதுக்கு ஃபிட்னெஸ் சர்டிஃபிகேட் கொடுக்கமுடியாது’ன்னு சொல்லிட்டாங்க.  மேலும், போலீஸ் அடிச்சதால ஏற்பட்ட காயங்கள்னு என்னோட வாக்குமூலத்தை ஏ.ஆர் (ஆக்ஸிடெண்ட் ரெஜிஸ்டர்) காப்பியில் எழுதிவிட்டார்கள் டாக்டர்கள்.

 

இந்தநிலையில், மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் சாரின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார் எனது அண்ணன். உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் எடுத்து விசாரிக்கிறார். அவரது, விசாரணைக்குப்பிறகுதான் நிரபராதியான  ‘உன்னை தண்டிக்க விருப்பமில்ல’ என்றும் என் உயிருக்கே உலைவைக்கும் அளவுக்கு என்னை மிகக் கொடூரமாக தாக்கிய ஏ.சி. சரவணனுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு அனுப்பினார் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன். ஆனால், மறுநாள் செய்தித்தாள்களில்  மாமுல் கேட்டு மிரட்டியதாக தவறான செய்தி வெளியாகிவிட்டது. பொதுமக்களின் நலன்களுக்காக போராடுற எங்களை பாராட்டக்கூட வேணாம். ஆனா, சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய ஏ.சி. சரவணன் உள்ளிட்ட போலீஸாரே இப்படி அவர்களுடன் கைக்கோர்த்துக்கிட்டா தப்பை தட்டிக்கேட்க யாருமே வரமாட்டாங்க. அதுவும், ஏ.சி. சரவணன் இப்படி நடந்துக்கிறது முதல் அறை அல்ல. தேனாம்பேட்டையில் இன்ஸ்பெக்டரா இருக்கும்போது புகார் கொடுக்கவந்த பெண்ணையே கடுமையா அடிச்சு தாக்குதல் நடத்தி மனித உரிமை ஆணையம் இவருக்கும் இவருடன் சேர்ந்து தாக்கிய போலீஸ் செந்திலுக்கும் சேர்த்து 50,000 ரூபாய் அபராதம் விதித்தது.  இப்படி, பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு டிரான்ஸ்ஃபர் ஆனவர்தான் இந்த ஏ.சி. சரவணன். இவரோட பேரே பைப்படி சரவணன் என்றுதான் சொல்லுவாங்க.

 

பணபலம், அதிகார பலம், அரசியல் பலம்னு இருக்கிறவங்கக்கூட கைக்கோர்த்துக்கிட்டு அப்பாவி மக்களைப்போட்டு அடிக்கிற ஏ.சி. சரவணன் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சார் மட்டும் இல்லைன்னா என்னை சிறையில அடைச்சு சமூக விரோதியாகவே சித்தரிச்சிருப்பாரு உதவி ஆணையர் சரவணன்” என்று குமுறிவெடிக்கிறார் சமூக செயற்பாட்டாளர் விஜயக்குமார்.

 

இதுகுறித்து, திருவெல்லிக்கேணி உதவி கமிஷனர் சரவணனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “ஆக்கிரமிப்புகள் குறித்து ஃபோட்டோ எடுத்து மிரட்டுவதாக புகார் வந்தது. அதனால்தான், கன்னத்தில் அடித்தேன்” என்றவரிடம் விஜயக்குமார் மிரட்டி பண வசூல் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்டபோது, “நிரூபிக்க முடியவில்லை. அதனால்தான், விட்டுவிட்டோம். மற்றபடி, எந்த அரசியல் தூண்டுதலாலும் நான் தாக்கவில்லை” என்றார் கேஷுவலாக.   

 

சரவணன் இன்ஸ்பெக்டராக இருக்கும்போது, புகாருக்குள்ளான ஒரு சிறுவனின் வீட்டிற்கு சென்று அந்த வீட்டிலுள்ள டிவி, பாத்திரம் அனைத்தையும் அடித்து உடைத்து வீசியதாக அச்சிறுவனனி தாய் குற்றஞ்சாட்டியுள்ளார். இப்படி, ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தாலும் உயரதிகாரிகள் இவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் இவரது மனித உரிமை மீறல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மனித உரிமை ஆணையம் இதில் தீர விசாரித்து நடவடிக்கை எடுத்தால்தான் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் இதுபோன்ற காவல்துறை அடாவடி தடுக்கப்படும்.  

 -மனோசெளந்தர்

 

சார்ந்த செய்திகள்