தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சுமார் 2 வயதுடைய ஆண் சிறுத்தை உயிரிழந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய வனத்துறையினர் ஆடு மேய்க்கும் விவசாயி அலெக்ஸ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் என 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தேனி வனத்துறையினர் தோட்ட உரிமையாளர்களான ரவீந்திரநாத் எம்.பி. உள்பட மூன்று பேருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதனடிப்படையில் தியாகராஜன், காளீஸ்வரன் ஆகிய இருவர் தங்கள் இடத்தை ரவீந்திரநாத் எம்.பி.க்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே விற்பனை செய்துவிட்டதாக வனத்துறையினரிடம் விளக்கம் அளித்திருந்தனர்.
ரவீந்திரநாத் எம்.பி, விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், அவர் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் நேரில் வந்து தேனி வனத்துறையினரிடம் விளக்கக் கடிதம் அளித்துள்ளனர். வழக்கறிஞரும் பழனி முன்னாள் எம்.எல்.ஏவுமான சுப்புரத்தினம் மற்றும் ராஜலட்சுமி, பிரகாஷ் குமார், ரத்னகுமார் உள்ளிட்ட வழக்கறிஞர் குழு தலைமையில் வழக்கறிஞர் சந்திரசேகரன் தேனி வனச்சரகர் அலுவலகத்தில் மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் ஷர்மிலியிடம் விளக்கக் கடிதம் வழங்கினர்.
இதுசம்பந்தமாக ரவீந்திரநாத் எம்.பி.யின் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறுகையில், “7வது இந்தியக் குடிநீர் வாரம் கூட்டம் டெல்லியில் குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறுவதால் அக்கூட்டத்தில் உறுப்பினராக ரவீந்திரநாத் பங்கேற்றுள்ளார். அதனால் வனத்துறையினர் விசாரணையில் அவரால் ஆஜராக முடியவில்லை. சிறுத்தை உயிரிழப்புக்கும் ரவீந்திரநாத் எம்.பி க்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே அவரை விசாரணையில் இருந்து வனத்துறையினர் விடுவிக்க வேண்டும். மேலும் சிறுத்தை மரணத்தில் உண்மையான குற்றவாளிகளை வனத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.