Skip to main content

மாவட்ட ஆட்சியர்களின் பெயரைக் கொண்டு ஏமாற்றும் கும்பல்! 

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

cheating in the name of district collectors!

 

மாவட்ட ஆட்சியர்கள் பெயரை பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் முயற்சி செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்கள் புகைப்படத்தை மொபைல் போன்களில் வைத்து அதன் வழியாக சில தனியார் நிறுவனத்தின் பெயரில் "கிப்ட் வவுச்சர்" வேண்டுமா என்று குறுஞ்செய்தியை கீழ்மட்ட அதிகாரிகளின் செல்போனுக்கு அனுப்பி இந்த மோசடியில் அந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது. 

 

இந்தக் கும்பல், விழுப்புரம் ஆட்சியர் மோகன் பெயரைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கத்தில் அப்படியான குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியரக அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாவட்டக் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடத்துமாறு கூறப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் பெயரைப் பயன்படுத்தி இதேபோன்று செய்திகள் பல தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், கடலூர் குற்றப்பிரிவு தாசில்தார் அன்பழகன் மூலம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

முதல்கட்ட விசாரணையில் அந்த குறுஞ்செய்தி மேற்குவங்க மாநிலத்தில் இருந்து பரவியுள்ளது என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்கள் பெயரை பயன்படுத்தி மோசடி செய்யப்படுவதாகவும் அதனால், அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற மோசடி சம்பவங்கள் ஏற்கனவே ஈரோடு, தேனி ஆகிய மாவட்ட ஆட்சியர்களின் பெயரிலும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்