
அரியலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ''மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தொகுதிக்கான மறு வரையறை என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே நடக்கக்கூடாது என்பதுதான் நம்முடைய வேண்டுகோள். ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை நடைமுறைப்படுத்துவதற்காகவே நியமிக்கப்பட்டவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தியாவில் பல மொழிகள் பேசுகின்ற தேசிய இனங்கள் வாழ்கின்றோம். அதில் ஒன்று இந்தி. தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என்று சொல்வது அவர்களின் ஆதிக்க போக்கை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இது எந்த வகையில் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டின் மட்டுமல்ல இந்தி அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கக் கூடாது என்பதுதான் விசிகவின் நிலைப்பாடு. ஆர்.என்.ரவி 'ஒரே தேசம் ஒரே மொழி' என்கிற ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை நடைமுறைப்படுத்துவதற்காக இப்படித் தொடர்ந்து பேசி வருகிறார். தமிழ்நாட்டு மக்களை எதிர்காலத்தில் இந்தி பேசும் மக்களாக மாற்றுவது, ஒரே தேசம் ஒரே மொழி என்ற நிலையை உருவாக்குவது, இந்திக்கு பிறகு சமஸ்கிருதமே இந்தியாவின் ஒற்றை மொழி என்று மாற்றுவது என அவர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விவரமானவர்கள். விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆளுநர் ரவியின் பேச்சுக்கு ஒரு போதும் இணங்க மாட்டார்கள்''என்றார்.