தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டுக்காக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதேசமயம், வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், திட்டமிட்டபடி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் இதில் மாற்றம் ஏதும் இருந்தால் முதலமைச்சர் அறிவிப்பார் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “நேற்று மாவட்டக் கல்வி அலுவலகர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் திருவண்ணாமலை, கரூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மாவட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளி திறப்பைத் தள்ளிவைக்க பெற்றோர் கோரிக்கை வைக்காவிட்டாலும் வெயிலின் தாக்கம் உள்ளது உண்மைதான். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்வது கடும் சிரமம் என்பதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இரண்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். பள்ளிகள் திறப்பு தேதி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.