தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (27.06.2024) வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய இரு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (27.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.