வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோரை அவர்களின் படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் தொடர்ந்து அத்துமீறி கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது. கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 14 பேர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அதற்குள்ளாக 20க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.
மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதன் மூலமாகவும், அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வதன் மூலமாகவும் வாழ்வாதாரங்களை முடக்கத் துடிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் 2 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளன.
மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.