நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க.- 8, பி.ஜே.பி.-1, அ.தி.மு.க.-1, காங்கிரஸ்- 2, சுயேச்சை- 3 இடங்கள் என மொத்தம் 15 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 1- வது வார்டு உறுப்பினர் சியாமளா போட்டியிடுவார் என மாவட்ட காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு முன்மொழிய, வழிமொழிய தி.மு.க.வினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால், அவர் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த 3- வது வார்டு உறுப்பினர் கல்பனாதேவி பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசுந்தரி, தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனாதேவி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்திருந்தார். அன்று மதியம் நடைபெற்ற துணைத் தலைவருக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் தி.மு.க. சார்பாக போட்டியிட்டு தி.மு.க. வெற்றி பெற்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தி.மு.க.வினர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால், அவர்கள் உடனடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, இன்று (05/03/2022) பட்டிவீரன்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட தலைவர் கல்பனாதேவி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சியின் செயல் அலுவலருமான உமாசுந்தரிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.