மணப்பாறையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடர்களின் இருசக்கர வாகனத்தினை மறித்து திருடர்களை மடக்கிப் பிடித்து செயினை மீட்ட ஆட்டோ டிரைவர் செல்லையாவிற்கு பொதுமக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது. இதில் பெண், மற்றும் செயின் திருடன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை சாலை தெற்கு லெட்சுமிபுரத்தில் வசித்து வருபவர் இரயில்வே ஊழியர் வினோஷ். இவரது மனைவி கோமளாதேவி. இவர் 4 வயது மகனை விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து மாலை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். சாலையோரம் நடந்து சென்ற கோமளாதேவியின் பின்னே இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இருவர், கோமளாதேவி கழுத்திலிருந்த 5 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பித்துள்ளனர்.
கோமளாதேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதேநேரம் பள்ளி சவாரிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் செல்லையா, இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவாறு வந்துள்ளார். சற்றும் தாமதிக்காமல் ஆட்டோவை இருசக்கர வாகனத்திற்கு நெருக்கடி கொடுத்து சாலையில் நிறுத்த, இதை சற்றும் எதிர்பார்க்காத திருடர்கள் இருசக்கர வாகனத்தை ஆட்டோவில் மோதி கீழே விழுந்தனர். இதில் திருடன் ஒருவன் தப்பி ஓடிய நிலையில், காயமடைந்த மற்றொரு திருடனை ஓடிவந்த பொதுமக்கள் பிடித்து செயினை மீட்டனர். பின் கை – கால்களை கட்டிவைத்தனர், தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் விசாரணையில் பொதுமக்களிடம் சிக்கிய செயின் பறிப்பு ஆசாமி நாகப்பட்டினம் மாவட்டம், காடம்பாடியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியினை சேர்ந்த விஜய் என்பதும், தப்பியோடிய நபர் திருச்சி எட்டரை கோப்பு பகுதியினை சேர்ந்த நவீன் என்பதும், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து காயமடைந்த விஜய் போலீஸ் மேற்பார்வையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செயின் பறிப்பில் காயமடைந்த கோமளாதேவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து. டி.எஸ்.பி. ராமநாதன், ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கோண்டு வந்தனர். தப்பியோடிய மற்றொரு திருடனை தேடி வந்தனர்.
இந்நிலையில், தப்பியோடிய மற்றொரு திருடனையும் போலீஸார் மணப்பாறை பகுதியிலேயே நேற்று கைது செய்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் சில காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்கின்றனர் காவல்துறையினர்.