சென்னை கிண்டி மடுவன்கரை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சக்திவேல்(54) என்பவர் இருந்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சக்திவேல் தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில், வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் அழகு, பொருளாதார நிலை, குடும்ப பிண்னனி என்று அனைத்தையும் ஆய்வு செய்யும் சக்திவேல், அதில் பெரியளவில் பின்புலம் இல்லாத அழகான எளிய குடும்ப பெண்களை மட்டுமே குறி வைத்திருக்கிறார்.
இதையடுத்து பணிக்கு சேர்ந்த பெண்களிடம் சக்திவேல் அடிக்கடி பேசுவது, அவர்களின் குடும்ப பிரச்சனை குறித்து அக்கரையுடன் கேட்பது போன்று அறிமுகமாகியுள்ளார். அவர்களும் சகஜமாக பேச ஆரம்பித்தவுடன், பணி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பெண்களை தனியாக அலுவலகத்தில் உள்ள தனது அறைக்கு அழைத்து பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளாராம். பின்பு அங்கு வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது , பாலியல் தொல்லையில் ஈடுபடுவது என்று அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தனது அறைக்கு வரும் பெண்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே போதை மருந்து கலந்த சுவிங்கம்(பூமர் பபுல்கம்) கொடுத்து அவர்களை மயக்கமடையச் செய்து பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளாராம். அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துகொண்டு சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எளிய பிண்ணனி கொண்ட பெண்கள் என்பதால் சிலர் நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்லாமல் அமைதியாக வேலையை விட்டு நின்று விடுவதாகவும் செல்லப்படுகிறது. இப்படி சக்திவேல் 40க்கும் மேற்பட்ட பெண்களிடம் அத்துமீறியுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் மூன்று பேர் மட்டும் தைரியமாக கிண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சக்திவேல் மீது புகார் அளித்துள்ளனர். மேலும், அந்த நிறுவனத்தில் சக்திவேலுக்கு உடந்தையாக இருந்த மனோன்மனி, நஸ்ரின் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது ஆனால், போலீசார் இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து கல்லூரி மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், போலீசார் இந்த வழக்கை கையாண்ட விதமும் பேசு பொருளாக மாறியது, இந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தும் போலீசார் கண்டுக்கொள்ளாமல் இருப்பது நடந்த கொடூரத்தை தைரியமாக வெளியே சொல்ல வந்த பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.