‘புரெவி’ புயலால் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த மழையில் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புயலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம், தன்னார்வ நிறுவனங்கள், பேரிடர் மீட்பு படையினர், காவல்துறை என பலரும் தங்களை ஈடுபடுத்திவரும் நிலையில், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம், நேற்று புரெவி புயல் பாதித்த பல பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம், ஆறுதல் கூறிய ஐ.ஜி, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரிடம் நலம் விசாரித்தார். அதுமட்டுமின்றி அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.
எப்பொழுது வேண்டுமானாலும் எங்களை அழையுங்கள்; நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம். உங்களுக்காக மீட்புப் பணிகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். பொது மக்கள் ஒருபோதும் அச்சமின்றி எங்களை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சைக் கேட்ட பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.