
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே.ராஜன் குழு நியமனத்தை ரத்து செய்யக் கோரி பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு ஜூலை 8க்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரு நாகராஜன் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரியும், அவர் வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரியும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், பொது பள்ளிகளுக்கான மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவி நந்தினி ஆகியோரும் இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். தலைமை நீதிபதி அமர்வில் இன்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு ஜூலை 8க்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் விரிவான விசாரணை தேவை எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 13 ம் தேதி 2:15க்கு தள்ளிவைத்துள்ளனர்.