சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை
விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
சென்னை சென்ட்ரல் முதல் பூந்தமல்லி நீதிமன்ற வளாகம் வரையிலான சாலை விரைவில் சீரமைக்கப்படும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பூந்தமல்லி நீதிமன்றம் முதல் சங்கம் திரையரங்கம் வரை உள்ள சாலையும், சென்னை சென்ட்ரலில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், பராமரிப்பு இல்லாமல் இருப்பதாலும், போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த சாலையை சீரமைக்க 13 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், இதுதொடர்பாக ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி வழக்கு முடித்துவைத்து உத்தரவைத்தனர். மேலும் டெண்டர் நடைமுறைகள் முடிக்கப்பட்ட பின்னர், பொதுமக்களின் நலன் கருதி அரசு விரைவாக சாலையை சீரமைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
- சி.ஜீவா பாரதி