'வீரதீர சூரன்' படத்தில் நடித்த நடிகர் சூரிக்கு, ரூபாய் 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். இந்த நிலையில், தயாரிப்பாளர் தர வேண்டிய சம்பள பாக்கியைத் தர மறுத்த நிலையில், நிலம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் பணம் பெற்று மோசடி செய்தாக புகாரளித்திருந்தார் நடிகர் சூரி.
இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, 'வீரதீர சூரன்' படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா ஆகிய இருவர் மீதும் அடையாறு காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“உண்மையில் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்க்கு சூரி தான், அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். ‘கவரிமான் பரம்பரை’ படத்துக்காக 2017- ஆம் ஆண்டு நடிகர் சூரிக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்கப்பட்டது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. என் மீதும், தந்தை மீதும் வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. சட்டம், நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது; சட்டம் அனுமதிக்கும் பாதையில் நாங்கள் செல்வோம். எல்லாம் தெளிவான பின் சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வரும் 29ஆம் தேதி, நடிகர் சூரி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.