தமிழ்நாடு மழை, வெள்ளச் சேதங்களைப் பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான ஏழு பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று (21/11/2021) மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.
மத்திய குழுவினர் இரண்டு பிரிவாகப் பிரிந்து வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நாளை (22/11/2021) முதல் இரண்டு நாட்கள் ஆய்வு செய்கின்றனர். அதன்படி, நாளை (22/11/2021) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (23/11/2021) கடலூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
இரண்டு நாள் ஆய்வுக்கு பிறகு நவம்பர் 24- ஆம் தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்ற மத்திய குழுவினர் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு சென்ற மத்திய குழுவினர், அங்கு வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்த புகைப்படங்களைப் பார்வையிட்டனர். மேலும், அவர்களுக்கு புகைப்படங்கள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. விளக்கினார்.