மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு
மத்திய, மாநில அரசுகளின் மீனவர் விரோதப் போக்கை கண்டித்து வரும் 13.12.2017 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்கத்தினால் மீனவர்கள் வாழ்க்கை சீரழிந்துவிட்டது. மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்க்கையையும், உயிரையும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இரண்டு அரசுகளும் முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை மிகவும் குறைத்து மதிப்பிட்டு 80, 90 பேர் என்றும் உயிர் இழந்தவர் எண்ணிக்கை 2, 3 பேர் என்றும் உண்மையை மறைத்தது ஏன் என்று தெரியவில்லை. மீனவர்களை தேடும் பணிகளை சரிவர செய்யாமல் 10 நாட்களாகியும் 2, 3 ஹெலிகாப்டர்களை வைத்தும் ஓரிரு கடலோர காவல் ரோந்து கப்பல்களை வைத்தும் கரையோரத்தில் மட்டும் தேடும் பணியை செய்து வருவதாக மீனவ மக்கள் வேதனைப்படுகிறார்கள். கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களை நான் நேரில் சந்தித்த போது துயரத்திலும், சோகத்திலும் இருப்பதை கண்டு மிக்க வேதனையடைந்தேன்.
மீனவர்கள் 100 முதல் 200 கடல் மைல்கள் வரை பல நாட்கள் தங்கி தொழில் செய்து வருகிறார்கள். எனவே, மீனவர்களை தேடும் பணி ஆழ்கடல் பகுதிக்கு சென்று தேடப்பட வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் நிராகரிப்பது ஏன்? 1500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், லட்சத் தீவுகள், கேரளா கடற்கரை பகுதிகளில் கரை சேர்ந்து சோற்றிற்கு கூட வழியில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களைத் தவிர 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் 70க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் இன்று வரை கரை திரும்பவில்லை. இவர்களின் நிலை என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து மத்திய மாநில அரசுகள் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகை மாவட்டங்களுக்கு நேரில் வராதது ஏன் ? நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்காதது ஏன் ? காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறாதது ஏன் ? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலiமைச்சர் மீனவர்களை ஒரு உயிராக மதித்து நேரில் சென்று பார்க்காதது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது அவரது மனிதாபிமானமற்ற, பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.
இறந்த மீனவர்களுக்கு கேரள அரசு வழங்குவதைப் போல் ரூ. 20 லட்சம் ஒரு மீனவ குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும். ஒக்கிப் புயல் தாக்கம் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நாகை மாவட்டங்கள் துயரத்திற்கு ஆளாக்கியிருப்பதால் இதனை தேசிய பேரிடராக உடனே அறிவிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கும், மீனவர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
இனி வருங்காலங்களில் புயல் மழை போன்ற இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்டும் போது மீனவர்களை காப்பாற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் மற்றும் கடற்படை கப்பல் நிறுத்த வசதிகளை செய்ய வேண்டும். மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு செயற்கைக் கோள் செல்பேசி (Satellite Cell Phone) வசதி வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியும். ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தொழிலுக்கு மீண்டும் செல்லும் காலம் வரை அன்றாட தேவைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும். இறந்த மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வரும் காலங்களில் கல்விக்கான செலவை அரசு ஏற்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளின் மீனவர் விரோதப் போக்கை கண்டித்தும் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் எம். கஜநாதன் தலைமையில் வரும் 13.12.2017 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் நான் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறேன். இதில் காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன். அனைத்துப் பகுதியை சேர்ந்த மீனவர்களும், தேசிய நண்பர்களும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.