கர்நாடக மாநிலம் பெங்களூர், ஜே.பி நகரை சேர்ந்தவர் பிரசன்னா. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். பிரசன்னா தனது குடும்பத்தினருடன் பெங்களூருவிலிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருவதற்கு வாடகை காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது எதிரே 40 டன் சிமெண்ட் ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் டிரைவர் ஷேக் ஜெய்லான் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் பயணித்த பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தினால் திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த பாலம் குறுகிய பாலம் என்பதுடன் வளைவுகள் நிறைந்தது. எனவே எதிரே வரும் வாகனங்கள் டிரைவருக்கு தெரியாத காரணத்தால் இந்த பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.