அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆதனக்குறிச்சி ஊராட்சியில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில், ராம்கோ சிமென்ட் ஆலை நிறுவனம், சுண்ணாம்புக் கல் சுரங்கம் வெட்ட, அந்தப் பகுதியில் உள்ள நீரோடைகள், குவாரிகள், கோயில் மானிய நிலங்கள், சிறு குட்டை, குளங்களைக் கணக்கில் காட்டாமல், மூன்று வருடங்களுக்கு முன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது.
அந்தப் பகுதியில், சுமார் 120 அடி ஆழத்திற்கு மணற்பாங்கான பகுதி உள்ளது. இந்நிலையில், சுண்ணாம்புக் கல் சுரங்க ஆழம் 300 அடிக்கு மேல் செல்லும் எனக் கூறுகிறார்கள். இதனால், அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இவ்வளவு பாதிப்புகளையும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தோலுரித்ததால், இதுவரை அவர்களால் சுரங்கம் வெட்ட முடியவில்லை. நீர்வழிப் பாதைகள், கோயில் மானிய நிலங்கள், குட்டைகளை ஆக்கிரமித்து எல்லைக்கல் நடுதல், வேலி அமைத்தல் போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனைப் பார்த்த புதுப்பாளையம் கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, களத்தில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
சிமென்ட் ஆலை நிறுவனர்கள் ஓடி ஒளிவதும், மீண்டும் வந்து மக்களைச் சீண்டுவதுமாய் உள்ளனர். அரசு அதிகாரிகளிடத்தில் மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. எனவே தொடர் போராட்டமே தீர்வாக இருக்கும் என்கின்றனர் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்.