இன்றைய இளம் தலைமுறையினர் செல்போன், சினிமா ஆகியவற்றால் ஏற்படும் கலாச்சார சீரழிவில் வயது வித்தியாசம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் இது பாலியல் சீண்டல் முதல் கொலை வரை சென்று, பெரிய ஆபத்தான சமூகமாக மாறி இருக்கிறது என்பது திருச்சி சம்பவம் உணர்த்துகிறது.
ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கும், பல பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. பலரும் செல்போன் வாயிலாக கற்றுக்கொள்கிறார்கள். மற்ற நேரங்களில் சிறுவர், சிறுமியர் கைகளில் இண்டர்நெட் இணைப்புடன் கூடிய செல்போன் வழங்கும்போது பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் நமக்கு காட்டுகிறது.
கேம் விளையாடுகிறேன் என்று தொடங்கும் சிறுவர்கள் செல்போன் பழக்கம், நாளடைவில் திசை மாறி செல்கிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் மேல்பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகள் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 9. இவர் வீ.பூசாரிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் 3 ம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்ல இருந்தார்.
இந்நிலையில் மாலை அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு மல்லிகை பூந்தோட்டத்தில் தலையில் பலத்த காயத்தோடு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை அருகில் உள்ள வீட்டை சேர்ந்த 14 வயது சிறுவன் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியதை அடுத்து சிறுமியை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் முதலில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அதன்பின்பு கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில், உயரதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி ரத்தக்கறை படிந்த நிலையில் கிடந்த ஒரு உடையை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, சிறுமி அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனின் சட்டை என்பது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சிறுவன் மீது சந்தேகம் ஏற்படவே தொடர்ந்து நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில் சிறுமியை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
கொலை செய்த சிறுவன், கிருத்திகாவிடம் அருகில் உள்ள தோப்பிற்கு விளையாடுவதாக சொல்லி அழைத்து சென்று செல்போனில் உள்ளது போன்று ஆபாச படங்களை காட்டி, அதில் வருவது போன்று முத்தம் கொடுத்திருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்க அந்த சிறுமி மறுத்து விட்டு நான் அம்மாகிட்ட சொல்லிவிடுவேன் என்று அழுதிருக்கிறார்கள். .
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் சிறுமியை கீழே கிடந்த கல்லால் அடித்துள்ளார். படுகாயம் அடைந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். சட்டை கழற்றி போட்டுவிட்டு வீட்டுக்கு சென்று குளித்து விட்டு எதுவும் தெரியாதது போல் தோட்டத்தில் சிறுமி இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக சொல்லி நாடகம் ஆடினேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சம்பவம் நடந்தது முதல் ஏதோ தனக்கு ஒன்றுமே தெரியாதது போல் ஒரு பெரிய நாடகத்தை 14 வயதிலேயே அரங்கேற்றி போலீசாருக்கு பெரும் நெருக்கடியை கொடுத்த பின்னரே வழக்கில் உண்மையை சிறுவன் ஒப்புக்கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலை தடுத்ததால் 14 வயது சிறுவன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.