Skip to main content

தமிழக அரசுக்கு எதிராக திரையுலகினர் திரள வேண்டும்: வாகை சந்திரசேகர் அறிக்கை

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
தமிழக அரசுக்கு எதிராக திரையுலகினர் திரள வேண்டும்: வாகை சந்திரசேகர் அறிக்கை

“நடிகர் திலகம் ‘செவாலியே’ சிவாஜி அவர்களின் சிலைத்திறப்பு விழாவில் இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து ‘குதிரை பேர’ அரசுக்கு எதிராக திரையுலகினர் திரள வேண்டும்” என கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் தலைவர் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

‘நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் மணி மண்டபத்தை அக்டோபர் 1 ஆம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார்’, என்று அறிவிக்கப்பட்டு இருப்பது திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘குதிரை பேர’ அதிமுக அரசின் இந்த அறிவிப்புக்கு, கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த நடிகர் திலகம் ‘செவாலியே’ சிவாஜி அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது, அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், சென்னை கடற்கரை சாலையில் திருவுருவச் சிலையை அமைத்து, அதைத் தானே முன்னின்று திறந்து வைத்தார். சென்னை, கடற்கரை சாலையில் உள்ள நடிகர் திலகத்தின் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று ஒரு வழக்கைத் தொடுத்து, தமிழ் திரையுலகத்திற்கு எதிராக ஒரு சிலர் செயல்பட முயற்சித்த போது, அதைத் தட்டிக்கேட்கவோ, உயர்நீதிமன்றத்தில் உறுதியாக வாதிடவோ அதிமுக அரசு முன் வரவில்லை. மாறாக, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலை இருப்பதாக அரசின் சார்பிலேயே எடுத்து வைத்து, அங்கிருந்து சிலை அகற்றப்படுவதற்கு முழுக்காரணமாக அதிமுக அரசு அமைந்ததை திரையுலகத்தினர் யாரும் மறந்து விடவில்லை.

எத்தனையோ உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் அதிமுக அரசு, மக்கள் நலப்பணியாளர்கள் விஷயத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் மீண்டும் மீண்டும் மனுக்களைப் போட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசு, நடிகர் திலகத்தின் சிலையை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மீது முறைப்படி மேல்முறையீடு செய்து, உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தி, நடிகர் திலகத்தின் சிலையை காப்பாற்றவில்லை.

அந்தச் சிலையை முதலமைச்சர் அகற்றிய போதே, “அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், நடிகர் திலகத்தின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சிலை அகற்றப்பட்டுள்ளது”, என்று எங்களுடைய கழக செயல் தலைவர் சுட்டிக்காட்டினார். அது உண்மை என்பது இன்றைக்குச் சிலை திறப்புவிழா அறிவிப்பின் மூலம் இந்த ‘குதிரை பேர’ அரசு வெளிப்படுத்தியிருக்கிறது.

புகழ்பெற்ற சென்னை, மெரினா கடற்கரைக்கு வரும் தமிழக மக்களும், பல்வேறு மாநில மக்களும், ஏன் உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் நடிகர் திலகத்தின் சிலையைப் பார்த்து ரசிக்கும் படியும், தமிழ் திரையுலக சாதனையாளரின் அருமை, பெருமைகளை புரிந்து கொள்ளும்படியும், தலைவர் கலைஞர் அவர்களால் வைக்கப்பட்ட நடிகர் திலகத்தின் சிலையை யாருக்கும் தெரியாத வகையில் அடையாறில் ஒரு ஓரமாக வைப்பதிலிருந்தே இந்த அதிமுக அரசு தமிழ் திரையுலகத்தின் பெருமைகளை எப்படி எல்லாம் மறைக்கப்பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இப்படி ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டுள்ள நடிகர் திலகத்தின் சிலையைத் திறந்து வைக்கவும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்களுக்கு மனம் வரவில்லை என்பது, தஞ்சையில் பிறந்து தமிழ்த் திரையுலகை ஆண்ட ஒரு கலைஞனுக்கு இழைக்கப்படும் மாபெரும் அவமானமாகும். தங்களுடைய பதவிச் சண்டைகளில், யார் மீதோ உள்ள கோபத்தில் நடிகர் திலகத்தையும், அவர் சார்ந்த திரையுலகத்தையும் முதலமைச்சர் அவமதித்த்து இருப்பதை தமிழ்கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, திரையுலக ரசிகர்கள் யாருமே மன்னிக்க மாட்டார்கள். ஒரு முதலமைச்சராக தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தச் சிலையை வேறு இடத்திற்கு மாற்றும்போது, அங்கும் முதலமைச்சராக இருப்பவரே திறந்து வைப்பதுதான் நாகரீகம். இந்தக் குறைந்தபட்ச நாகரீகத்தைக் கூட கடைப்பிடிக்காமல், நடிகர் திலகத்தின் சிலையை அமைச்சர்களை வைத்துத் திறந்து வைக்க முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி உத்தரவிட்டிருப்பது, திரையுலகத்தை மட்டும் அவமதிக்கும் செயல் அல்ல, ஏழரை கோடி தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் புகழுக்கும் இழுக்குச் சேர்ப்பதாக அமைந்திருக்கிற என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நடிகர் திலகத்தின் மாண்பிற்கு இழுக்கு சேர்க்கும் செயலில் ஈடுபட்டுள்ள முதலமைச்சருக்கு, திரையுலகத்தில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் திறந்து வைத்தால் மட்டுமே நடிகர் திலகத்தின் சிலைத் திறப்புவிழாவிற்கு வருவோம் என்று திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்கு நடிகர் திலகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமரியாதை நாளை எந்தவொரு திரையுலகத்தினருக்கும் ஏற்படலாம் என்பதால், ஒட்டுமொத்த தமிழக திரையுலகமும் நடிகர் திலகத்திற்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராகத் திரண்டெழ வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்