விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பல் பிடுங்கிய விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஏஎஸ்பி பல்வீர் சிங், நெல்லை எஸ்.பி சரவணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 3 ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். ஆய்வாளர்கள் சந்திரமோகன் (அம்பாசமுத்திரம்), ராஜகுமாரி (கல்லிடைக்குறிச்சி), விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். அதேபோல் அம்பாசமுத்திரம் தனிப் படை எஸ்ஐ சக்தி நடராஜன், காவலர்கள் மணிகண்டன், சந்தான குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, சார் ஆட்சியரும் விசாரணை அதிகாரியுமான முகமது சமீர் ஆலம் மூன்று காவல் நிலையங்களுக்கும் நேரில் சென்று சிசிடிவி தொடர்பான காட்சிகளை கேட்டு விசாரணை நடத்தினார். அப்பொழுது அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காட்சிகள் பதிவாகவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல்நிலையத்தில் பதிவான காட்சிகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.