Skip to main content

திமுக எம்.பி. ஆலையில் தொழிலாளி மர்ம மரணம்! ஆதாரங்களை திரட்டும் சி.பி.சி.ஐ.டி! 

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

CBCID Investigation on Cuddalore MP Ramesh Factory employee case
                                          எம்.பி. ரமேஷ் மற்றும் கோவிந்தராஜ்

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரின் மகன் மலைக்கன்னி (எ) கோவிந்தராஜ். 60 வயதாகும் இவர், பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் உள்ள, கடலூர் திமுக எம்.பி., டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றிவந்தார். இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி காலை முந்திரி ஆலைக்கு வேலைக்குப் போன கோவிந்தராஜ், 20ஆம் தேதி அதிகாலை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சடலமாக கிடந்துள்ளார். கோவிந்தராஜ், முந்திரி ஆலையில் முந்திரி திருடியதை எம்.பியின் ஆட்கள் விசாரித்ததால் அவமானத்தில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக எம்.பி. ரமேஷ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

 

ஆனால், எம்.பி.யும், அவரது ஆட்களும் அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடுகின்றனர் எனக் கூறி கோவிந்தராஜ் உறவினர்களும், பாமகவினரும் தொடர்ந்து போராடிவருகின்றனர். மேலும், கோவிந்தராஜ் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், தமிழ்நாட்டுக்கு வெளியே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவிந்தராஜன் மகன் செந்தில்வேல் வழக்கு தொடுத்தார். அதனடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கோவிந்தராஜன் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

 

மரணமடைந்த கோவிந்தராஜுவின் மகன் செந்தில்வேல், நேற்று முன்தினம் (27.09.2021) டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் 'கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் 7 ஆண்டுகளாக என் தந்தை கோவிந்தராஜ் வேலை பார்த்துவந்தார். என் தந்தையை எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது அடியாட்கள் சேர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி கொடூரமாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். 

 

CBCID Investigation on Cuddalore MP Ramesh Factory employee case
                                                      செந்தில்வேல்

 

அன்று இரவு 10.15 மணியளவில் என் தந்தை மீது பொய் வழக்குப் பதிவுசெய்யும் வகையில், ரமேஷின் உதவியாளர் நடராஜன் மற்றும் சிலர் ரத்த காயங்களுடன் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கிருந்த போலீசார் உயிருக்குப் போராடிய என் தந்தையை மருத்துவமனையில் சேர்க்காமல் நிற்க வைத்து படம் எடுத்துள்ளனர். பின்னர் மீண்டும் நடராஜன் மற்றும் அவரது ஆட்களுடன் என் தந்தையை அனுப்பியுள்ளனர். அவர்கள் என் தந்தையை அடித்துக் கொன்றுள்ளனர். அதிகாலை 2.10 மணிக்கு என்னை தொடர்புகொண்டு என் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக ரமேஷின் உதவியாளர் கூறினார்.

 

காடாம்புலியூர் போலீசார், இவ்வழக்கை கொலை என பதிவு செய்யாமல் ரமேஷை காப்பாற்றும் நோக்கில் மர்ம மரணம் என்று பதிந்துள்ளனர். போலீசார் தங்கள் கடமையை சரியாக செய்து என் தந்தையை மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். அவர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். என் தந்தையை அடித்துக் கொன்றதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட போலீசார் மீது துறை ரீதியாக குற்றவியல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காடாம்புலியூர் காவல் நிலையம் மற்றும் பண்ருட்டி மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி கோமதி, ஆய்வாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் வழக்கு விசாரணைக்காக நேற்று பண்ருட்டி வந்தனர். அவர்கள் பயணியர் விடுதியில் வைத்து காடாம்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார், கோவிந்தராஜுவின் மகன் செந்தில்வேல் மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்தினர். முன்னதாக நேற்று முன்தினம் காடாம்புலியூர் காவல் நிலையத்துக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் தீபா, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்துச் சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்