Published on 29/06/2021 | Edited on 29/06/2021
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார்கள். இதுதொடர்பான வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மீண்டும் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், போக்சோ வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விடிய விடிய சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தற்போது கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று சிவசங்கர் பாபாவிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். அந்தப் பள்ளியில் குறிப்பிட்ட சொகுசு அறையில் வைத்து சிவசங்கர் பாபாவிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தீர்களா? அதேபோல் சொகுசு அறைக்கு யாருடைய உதவியின் மூலம் மாணவிகளை அழைத்து வந்தீர்கள். இதற்கு ஆசிரியர்கள் உதவி செய்தார்களா என பல்வேறு கேள்விகள் சிவசங்கர் பாபாவிடம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் மாணவிகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டியும், ஆபாச எஸ்.எம்.எஸ்கள் குறித்தும் சிவசங்கர் பாபாவிடம் துருவித் துருவி கேள்வி எழுப்பப்பட்டது.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பள்ளியிலேயே வைத்து விசாரணை நடைபெற்றது. சிவசங்கர் பாபாவிடம் பெறப்பட்ட வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.