டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
தமிழகத்தை உலுக்கியிருக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4, குரூப் 2 மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து, சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 32 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்தத் தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி கௌதம் உத்தரவிட்டார். அதனையடுத்து, இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயக்குமாரை சிபிசிஐடி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
குரூப் 4, குரூப் 2 மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் நூற்றுக்கணக்கான நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தேர்ச்சிபெற வைத்ததாக ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் யாரிடம் எவ்வளவு பணம் பெற்றுக் கொண்டு ஜெயக்குமார் தேர்ச்சிபெற வைத்தார் என்பது குறித்தும், இதற்கு உடந்தையாக அதிகாரிகள் உள்ளிட்டோர் யார் யார் இருந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்துவதற்காக அவரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் ஜெயகுமாருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தார். மேலும், குரூப் 2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஒரு தேர்வர் உள்ளிட்டோரிடம், 2- வது நாளாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், குரூப்-2 முறைகேட்டில் கைதான காவலர் சித்தாண்டியையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.